முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபத்தை ராமேஸ்வரம் பேக்கரும்பில் பிரதமர் மோடி கடந்த 27ல் திறந்துவைத்தார். அப்துல் கலாமின் மணிமண்டபத்தில் அவர் வீணை வாசிப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டதுடன், அதனருகில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மட்டும் வைக்கப்பட்டது. சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரங்களினால், அப்துல்கலாமின் அண்ணன் பேரன் சலீம், பகவத் கீதைக்கு அருகில் குரான் மற்றும் பைபிள் ஆகிய புனித நூல்களையும் வைத்தார். இதற்கு இந்து மக்கள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவற்றை கலாமின் அண்ணன் பேரன் சலீம் அகற்றி அங்கிருந்த கண்ணாடிபேழைக்குள் வைத்தார்.
மக்கள் ஜனாதிபதியான அப்துல் கலாம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் உரையாற்றி கொண்டிருந்த போது திடீரென காலமானார். இதைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டது.