பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக, பாரதீய ஜனதா கட்சியின் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிடிஐ செய்தி முகமை தகவல்களின்படி, இந்தத் தலைவர்களின் மேல்முறையீட்டை லக்னெள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று நிராகரித்தது.
எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி மற்றும் பிற தலைவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறிவிட்டது.
நீதிமன்ற விசாரணையின்போது, அத்வானி, ஜோஷி, உமாபாரதி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.
இவர்களைத் தவிர, பாரதீய ஜனதா கட்சியின் வினய் கட்டியார், இந்துத்துவா பிரசாரகர் சாத்வி ரிதம்பரா ஆகியோரும் ஆஜராகினர்.
இவர்கள் ஆறு பேருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் உத்தரவாதத் தொகையுடன் பிணை வழங்கப்பட்டது.
1992-ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதியன்று பாரதீய ஜனதா கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான கர சேவகர்களால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
பாபர் மசூதி இருக்கும் இடம் ராமர் பிறந்த இடம், அங்கு ராமர் ஆலயம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை இன்றும் தொடர்கிறது.
பாபர் மசூதிக்கு சேதம் ஏற்படாது என்று அப்போதைய முதலமைச்சர் கல்யாண் சிங் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தாலும், அவரால் அதை நிறைவேற்ற முடியாமல் போனது.