யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் : காங்கிரஸ்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில், தலித் குடும்பத்தினருக்கு சோப்பு வழங்கிய விவகாரத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த சமுதாயத்திடம் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், அவர் மீது வழக்கு பதிவு ெசய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், குஷிநகர் மாவட்டம் மனிப்பூர் தீனாபட்டி கிராமத்துக்கு கடந்த வியாழக்கிழமையன்று சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் முஷார் தலித் குடும்பத்தினரை அவர் சந்தித்தார். ஆனால், அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது முன்னதாக முஷார் தலித் குடும்பத்தினரிடம் சோப்பு மற்றும் ஷாம்பூ வழங்கிய  அதிகாரிகள் கூட்டத்துக்கு பங்கேற்க வருவதற்கு முன்பு குளித்து விட்டு வர வேண்டும் என தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து, அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலித் குடும்பத்தினருக்கு சோப்பு வழங்கிய விவகாரத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். குறைந்த பட்ச தீண்டாமை நேரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாஜ தலைவர்கள் அந்த கிராமத்தின் அனைத்து சமுதாய மக்களையும் அவமானப்படுத்தி விட்டனர். இது அதிர்ச்சியான தீண்டாமை செயல். இவ்வாறு அவர் கூறினார்.

Share