முத்தலாக் பற்றி ஆராய உச்ச நீதிமன்றம் முடிவு

புதுடெல்லி: பெண்களுக்கு விவகாரத்து வழங்க முஸ்லிம் மதத்தினர் பின்பற்றும் முத்தலாக் நடைமுறை, அந்த மதத்தின் அடிப்படை உரிமையா என்று ஆராயப்படும் என்று உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது. முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவகாரத்து வழங்க பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் 5 தனி ரிட் மனுக்களை தாக்கல் செய்தார். இது தவிர மேலும் 2 மனுக்கள் வெவ்வேறு நபர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதில், நிக்கா ஹலாலா, பலதார மணம் உள்ளிட்டவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முத்தலாக் முறைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை கோடை விடுமுறை அமர்வில் தினசரி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று அப்போது உச்ச நீதிமன்றம் கூறியது. முஸ்லிம் மதத்தினர் பின்பற்றும் முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  உச்ச நீதிமன்ற அறிவிப்புபடி, கோடை விடுமுறை கால அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன், யூ.யூ.லலித் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:  பெண்களுக்கு விவகாரத்து வழங்க முஸ்லிம் மதத்தினர் பின்பற்றும் முத்தலாக் நடைமுறை அந்த மதத்தின் அடிப்படை உரிமையா என்பது பற்றி ஆராயப்படும். அதேசமயம், பலதார மணம் குறித்து ஆராயப்படாது. அது முத்தலாக் பிரச்னைக்கு தொடர்பு இல்லாதது. உச்ச நீதிமன்றம் கேட்கும் 2 கேள்விகளுக்கு தங்களது தரப்பு வாதத்தை முன்வைக்க இரு தரப்பினருக்கும் 2 நாட்கள் வழங்கப்படும். அதேசமயம், எதிர்வாதம் செய்ய இரு தரப்பினருக்கும் ஒரு நாள் வழங்கப்படும். தங்களது எந்த கருத்துக்களையும் தெரிவிக்கலாம். ஆனால், ஒரே கருத்தை திரும்ப திரும்ப கூறக் கூடாது. முஸ்லிம் மதத்தின் அடிப்படையில்  முத்தலாக் செல்லுமா செல்லாதா என்பதில்தான் இருதரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.5 நீதிபதிகளும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்உச்ச நீதிமன்றத்தில் முத்தலாக் மனுவை விசாரிக்கும் 5 பேர் கொண்ட அமர்வில் உள்ள நீதிபகள் ஒவ்வொருவரும் மாறுப்பட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் சீக்கியர். நீதிபதி குரியன் ஜோசப் கிறிஸ்துவர், நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன் மற்றும் யூ.யூ.லலித்  ஆகியோர் முறையே பார்சி மற்றும் இந்து மதத்தை சேர்ந்வர்கள். நீதிபதி அப்துல் நசீர் இஸ்லாமியர்.

Share