பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத்தலைவராக தொடர வாய்ப்பு கிடைக்குமா?

டெல்லி: குடியரசுத்தலைவர் தேர்தலில் மீண்டும் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்த பாஜக முன்வந்தால் போட்டி வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதேபோல் பாரதீய ஜனதா கட்சிக்கு போட்டியாக எதிர்க்கட்சிகளும் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. இதற்காக 9 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் அவரை எதிர்த்து யாரையும் நிறுத்த வேண்டாம் என்கிற முடிவுக்கு எதிர்க்கட்சிகள் வந்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஓய்வுக்கு பின் பிரணாப் முகர்ஜி வசிப்பதற்க்காக டெல்லியில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு தயாராகி வருவதால் பாஜக அவரை வேட்பாளராக நிறுத்தும் வாய்ப்பு இல்லை என தெரிகிறது. இதையடுத்து குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டி உருவாகியுள்ளது. இந்திய குடியரசுத்தலைவர்களில் ராஜேந்திர பிரசாத் தவிர வேறு யாருக்கும் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share