புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவிய வழக்கில் ஜாமீன் மறுப்பு!

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சேகர் ரெட்டிக்கு உதவியதாக கைதான கொல்கத்தா தொழிலதிபர் பாரஸ்மல் லோதாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில், கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 147 கோடி ரொக்கம், 178 கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் முறைகேடான முறையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாக தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகியோரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர். 

இவர்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியதாக, கடந்த ஜனவரி 3ஆம் தேதி  தொழிலதிபர் பாரஸ்மல் லோதாவை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி லோதா சார்பில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த மனு சிபிஐ நீதிமன்ற நீதிபதி வெங்கடசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணை முழுமையாக முடியாத நிலையில் பரஸ்மல் லோதாவுக்கு ஜாமின் வழங்க கூடாது என சி.பி.ஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தற்போதைய நிலையில் ஜாமின் வழங்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Share