ஜார்கண்ட்: பெண்களின் பெயரில் சொத்து வாங்கினால் பத்திர செலவு வெறும் 1 ரூபாய்

ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வர் அசத்தல் ஜார்கண்டில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் உத்தரபிரதேச பாஜ முதல்வர் யோகியின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை பார்த்து மற்ற மாநிலங்களும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்க தயாராகி வருகின்றன. இவற்றில் ஜார்கண்ட் அரசு சற்று மேம்பட்டு, பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால், பத்திர பதிவு கட்டணம் வெறும் ரூ.1 மட்டும்தான் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. தற்போது அங்கு சொத்து பதிவு செய்ய 7 சதவீத பத்திர பதிவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதல்வர் ரகுபர்தாஸ் கூறுகையில், எங்களது இந்த அறிவிப்பின் மூலமாக பெண்களின் வளர்ச்சியில் மேம்பாடும், சமூக பாதுகாப்பும் கிடைக்கும். இந்த உத்தரவுக்கு விரைவில் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ.100 கோடி வரை நிதி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் 2019 லோக்சபா தேர்தலை குறிவைத்து அரசியல் ஆதாயத்திற்காக இதை மாநில அரசு அறிவித்துள்ளது என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் கூறத் தொடங்கி விட்டனர்.

Share