தவறாக நடக்கும் விமான பயணிகளுக்கு தடை
புதுடெல்லி: தவறாக நடக்கும் விமான பயணிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வர உள்ள பயண தடை சட்டங்களுக்கு ஒரே நேரத்தில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. விமான பயணத்தின் போது தவறாக நடந்து கொண்டால் அந்த குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து 3 விதமான தடைகளை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 3 முதல் மாதங்கள் முதல் வாழ்நாள் தடை வரை விதிக்கப்படும். இந்த முடிவுக்கு இந்திய விமானப் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எத்தனை மாதம் தடை விதிக்கலாம் என்பதை விமான நிறுவனங்களின் முடிவுக்கு விட கூடாது என்று கூறியுள்ள இந்த சங்கம் அதை விமான போக்குவரத்து அமைச்சகம், அல்லது விமான போக்குவரத்து இயக்குநரகமே முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மத்திய அரசின் சட்டத்தை விமர்சித்துள்ளன. பயண தடைக்கு எதிராக நீதிமன்ற தடையாணை பெற முடியாத வகையில் புதிய சட்டம் இருக்க வேண்டும் விமான போக்குவரத்து துறை தொடர்பான வர்த்தக துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். பயணி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால் அவருக்கு இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.அனைத்து விமானங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம் என்று என்பதும் அவர்களின் கோரிக்கை ஆகும். டாடா விமான சேவையான விஸ்தாரா அரசின் முடிவை வரவேற்றுள்ளது.