நம் அன்றாட வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக காணப்படக்கூடிய கண்ணாடி திடப்பொருளா அல்லது திரவப்பொருளா ? இப்படிக் கேட்டால் பொதுவாக சாதாரண மனிதர்கள் திடப்பொருள் என்றுதான் சொல்லுவர்.
ஆனால், சில தொல்லியல் ஆய்வாளர்கள் பழங்காலத்தைய சன்னல் கண்ணாடிகளை ஆய்வு செய்தபோது, அவற்றின் கீழ்ப்பாகம் தடிமனாக இருப்பதைக் கண்டனர். இதனால், காலம் செல்லச் செல்ல, கண்ணாடி ஒருவேளை திரவமாக இருப்பதனால் புவி ஈர்ப்புவிசையால் வழிகிறதோ என சந்தேகப்பட்டனர். இருப்பினும் இது சரியான அனுமானம் இல்லை என்றும், புராதனமான சன்னல் கண்ணாடி அடிப்பகுதியில் தடித்திருப்பதற்கு பண்டை உற்பத்தி முறையே காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனினும், கண்ணாடியின் மூலக்கூறுகள் பிணைவு அமைப்பினைப் பார்க்கும் பொழுது, அது திடப்பொருளின் மூலக்கூறு அமைப்பினைப் போல் இல்லாமல், திரவங்களின் அமைப்பினைப் போலவே உள்ளது. திடப்பொருளின் மூலக்கூறு அமைப்பு படிகமாக(Crystal) இருப்பதால், அதன் மூலக்கூறுகளின் இயக்கம் கட்டுப்படுத்த படும்.
ஆனால் கண்ணாடியின் மூலக்கூறு அமைப்பு, திரவங்களைப் போல ஒழுங்கில்லாத அமைப்பாக இருக்கிறது. ஆனாலும், கண்ணாடி உற்பத்தி செய்யப்படும் போது திரவ நிலையில் இருந்து உறை நிலைக்கு குளிர்விக்கப்பட்டு அன்னிலையிலே தொடர்வதால், கண்ணாடியின் மூலகூறுகளால் அதிக அளவில் இயங்க முடியாது.