2.7 மைல் அகலமுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள பாரிய விண்கல் ஒன்று, இவ்வருடம், செப்டம்பர் 1 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப் போகிறது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
ஃப்ளாரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த பெரிய விண்வெளிப் பாறை நமது கிரகத்திலிருந்து 4.4 மில்லியன் மைல்கள் தொலைவில் கடந்து செல்லும். இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலுள்ள தூரத்தைப் போல 18 மடங்கு அதிக தூரமாகும்.
நாசாவின் கூற்றுப்படி, இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ள, இந்த அளவுள்ள விண்கற்களில், இதுதான் பூமியின் மிக அருகில் முதலாவதாக கடந்து செல்லப்போகிறது. இதன்மூலம், தொலைதூர பொருள்களை முதன்முதலாக, பூமியை அடிப்படையாகக் கொண்ட ரேடார் அவதானிப்புகள் மூலம் வெகு அருகிலிருந்து, ஆராய்வதற்கான முதல் வாய்ப்பை இவ்விண்கல் அளித்துள்ளது.
இது ஆபத்தானதாக தோன்றினாலும், புளோரன்ஸ் விண்கல் பாதுகாப்பாக பூமியை சுமார் 4.4 மில்லியன் மைல்களுக்கு (7 மில்லியன் கிலோமீட்டர்) அப்பால் பறந்து சென்று விடும் என்று நாசா கூறுகிறது.