இந்திய சுதந்திர தினத்தன்று, லடாக் பாங்கோங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதால் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே லேசான கை கலப்பு ஏற்பட்டது. இது குறித்து சீன அரசுக்குத் புகார் அளிக்கப் பட்டபோது, தமக்கு எதுவும் தெரியாது என சீனா தெரிவித்துள்ளது.
நேற்று காலை 6 மணிக்கு, மீண்டும் 9 மணிக்கு என இரண்டு தடவை சீன ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் வர முயன்றனர். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி தக்க பதிலடி கொடுத்தனர். மனித சங்கிலி அமைத்து அரண்போல நின்று கொண்டு இந்திய வீரர்கள், சீன வீரர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ விடாமல் தடுத்தனர்.
இதையடுத்து இந்திய வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே லேசான கை கலப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்ற சீன வீரர்கள், தங்கள் பகுதியில் பதுங்கி இருந்து கொண்டு சீன வீரர்கள் கல் வீச்சில் ஈடுபட்டனர். இதில் இந்திய வீரர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதற்குப் பதிலடியாக, இந்திய வீரர்களும் கல் வீசியதில் சீன வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்கு பிறகு சீன வீரர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
சீனாவின் இந்த செயலுக்கு இந்திய அரசு தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட போது, தமக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்றும், எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் சீனா உறுதியாக இருப்பதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவிக்க கேட்கப்பட்டபோது, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் (Hua Chunying) கூறுகையில், “இந்த தகவல் பற்றி எனக்குத் தெரியாது. சீன எல்லைப் படைகள் இந்திய-சீன எல்லையில் சமாதானத்தையும் அமைதியையும் தக்கவைத்துக் கொள்ள உறுதிபூண்டிருப்பதை நான் உங்களுக்கு சொல்ல முடியும். ”
“நாங்கள் எப்போதும் சீனக் கட்டுப்பாட்டின் கீழ் உண்மையான கட்டுப்பாட்டின் (LAC) வரிசையில் ரோந்து செய்கிறோம். எல்.ஏ.சி. மற்றும் இரு தரப்புக்கும் இடையே உள்ள உடன்படிக்கைகளுக்கு இணங்க இந்திய தரப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், “என அவர் கூறினார்.