இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தின விழா டெல்லியில் சிறப்பாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
“1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தியதி” என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், “நமது நாட்டின் உதய நாள்” என்றால் சொன்னால் அது மிகையாகாது.
இதனை முன்னிட்டு, தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பின்னர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது :
“வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். உத்தரபிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் இறந்தது, எல்லைப் பகுதியில் நீடிக்கும் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கடந்து, சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததால் இந்த நாடே மன வேதனையில் உள்ளது.”
மேலும் அவர் கூறுகையில், 2022-க்குள் ஒரு புதிய இந்தியா படைத்திட நாம் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம் என அவர் கூறினார். நாட்டில் அனைவரும் சமம்; நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார் புதிய இந்தியாவை உருவாக்கும் உறுதியுடன் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுகிறோம் என மோடி உரையில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு செயலையும் தேசபக்தியுடன் செய்தால் நினைக்கும் புதிய இந்தியா உருவாகும் என்று அவர் கூறினார். மக்கள் ஒத்துழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் புதிய இந்தியா பிறக்கும் என்று கூறினார்.
சுதந்திர தின விழாவின்போது அருண் ஜெட்லி, தேவ கவுடா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டார்கள்.