நீட் தேர்வு: ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவு மசோதா ஏற்பு

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு   நீட் தேர்வு அவசியம் என்ற விதியிலிருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் தமிழகத்தின் அவசர சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  பின்னர் இது சம்பந்தமான பல வழக்குகளின் பின்னர், தமிழக மருத்துவக்  கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு   நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அமையும் என்ற நிலை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஓராண்டு விலக்கு பெற, அவசர சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை செயலர் ராதா கிருஷ்ணன், நீட் தேர்விற்கான அவசர சட்ட வரைவை டெல்லியில் உள்துறை அமைச்சகத்திடம் இன்று காலை ஒப்படைத்தார்.

பின்னர், நீட் தேர்விற்கான அவசர சட்ட வரைவை ஏற்றுக் கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, சட்டத் துறை ஆகிய அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதனால் இந்த ஆண்டு கடந்த ஆண்டை போல் பிளஸ்-2 மார்க் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதன் காரணமாக பிளஸ்-2 தேர்வில் அதிக மார்க் எடுத்தும் நீட் தேர்வில் போதிய மார்க் இல்லாததால் பலருக்கு மருத்துவ இடம் கிடைக்கவில்லை. இப்போது அவசர சட்டம் வருவதால் அவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதே நேரத்தில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பலர் சீட்டுகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சி.பி.எஸ்.இ. மூலம் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மார்க் எடுத்து மருத்துவ படிப்புக்கு தேர்வு பெற்றுள்ளனர். அவர்கள் இந்த இடத்தை இழக்க வேண்டி உள்ளது.

ஆயினும் தற்போதைய அவசரச் சட்டம் இவ்வருடத்திற்கு மட்டுமே பொருந்துமாதலால், அரசியல் தலைவர்களில் பலர், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு தேவை என வலியுறுத்தியுள்ளனர்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top