சில தாவரங்களில் இருந்து புற்று நோயைக் குணமாக்கும் மருந்துகள் எடுக்கப்படுகின்றன என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ஆனால், ஒரு தாவரத்திலிருந்து மருந்து எடுக்கப்படும் செயல்முறையை உருவாக்கவும், பல நிலைகளில் சோதனை செய்து இறுதியில் அதனை மருந்தாக விற்கவும் எடுத்துக் கொள்ளப்படும் காலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும், என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
புற்றுநோய் என்பது என்ன ?
உடலிலுள்ள உயிரணுக்கள்ளான செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.
கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும்.
தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.
கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.
செல்கள் எதனால் இயல்புக்கு மாறாக கட்டுப்பாடின்றி பிரியத் துவங்குகிறது என்பது இதுவரைத் துலக்கமாக கண்டறியப்படவில்லை. ஆனால் மரபியல், சுற்றுச்சூழல் அசுத்தங்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகள் ஆகியன முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?
அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும். புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.
பசுமை கீமோதெரப்பி
இவற்றுள், கீமோதெரப்பியில் தாவரங்களிலிருந்து பெறப்படும் மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன.
இந்த சக்திவாய்ந்த கலவைகள் பொதுவாக விரைவாக பிரியும் செல்களைத் தாக்குகின்றன. இந்த டாக்ஸின்கள் பொதுவாக புற்றுநோய் கழலைகளை இலக்காகக் கொண்டிருந்தாலும், சிலசமயம் முடியை உருவாக்கும் சுரப்பிகளைப் போன்ற நல்ல செல்களையும் தாக்குகின்றன, இதனால் தற்காலிக முடி இழப்பு ஏற்படுகிறது.
பசிபிக் யூ (Pacific yew) என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் பக்ளிடேக்ஸெல் (Paclitaxel – Taxol) என்ற கருப்பை புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்து உருவாக்கப்படுகிறது. இம்மருந்து புற்றுநோய் செல்களின் விகிதங்களை வெகுவாக குறைக்கிறது. வட அமெரிக்காவில் கிடைக்கும், அமெரிக்கன் யூ-வும் (taxus canadensis) பக்லிடாக்சல் மருந்து உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.
ரோசி பெரிவிங்கிள் (rosy periwinkle) என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்படுக் வின்கிரிஸ்டைன் (Vincristine) மற்றும் வின்பிளஸ்டைன் (vinblastine) மருந்துகள் குழந்தை பருவ லுகேமியா (leukemia) சிகிச்சையில் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகின்றன.
சீனாவில் வளரும் “ஹேப்பி ட்ரீ” (கேம்ப்டொத்கா அகுமினாட்டா), என்ற மரத்திலிருந்து எடுக்கப்படும் காம்ப்டோடைசின் (Camptothecin) என்ற மருந்து சீனாவில் இரைப்பை குடல் புற்றுநோயைப் பயன்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
மேலும் மேயாப்பிள்(mayapple) என்றழைக்கப்படும் ஒரு உள்ளூர் காட்டு மலர் விரைவில் நுரையீரல் மற்றும் விரைப் புற்றுநோய்களுக்கான, தற்போது சோதனையிலுள்ள எடோபாஸைடு (etoposide) என்ற மருந்துக்குத் தேவையான பாடோபிளைலோடாக்சினை (podophyllotoxin) உருவாக்க பயன்படுகிறது.
தொடரும்