மழை பெய்ததால் ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா, மீண்டும் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முரசொலி பத்திரிகை துவங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து, சென்னையில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆகஸ்டு 10 (வியாழன்) அன்று நிகழ்ந்த பவள விழா வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியர்களும், ஊடகவியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆகஸ்டு 11 – வெள்ளிக்கிழமை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்த பவள விழாவின் போது ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்த வேளையில், மேகம் இருண்டு விழா தொடங்குவதற்கு முன்பே மழை கொட்ட தொடங்கியது. சிறிது நேரத்தில் ஓய்ந்து விடும் என்று தொண்டர்களும் நனைந்தபடியே இருந்தனர்.
இருந்தாலும் மழையில் நனைந்தபடியே விழாவை தொடங்கினார்கள். துரைமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வரவேற்றார். மழையில் நனைந்தவாறே தலைவர்கள் ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கு அடையாளமாக இந்த விழா நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து கனமழை கொட்டி கொண்டிருந்ததால் கூட்டத்தை நடத்த முடியாத நிலை உருவானது. இதையடுத்து மு.க. ஸ்டாலின் பேசும்போது, மழையின் காரணமாக பவளவிழா பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து, இன்று மு.க.ஸ்டாலின், “மழையால் ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா கூட்டம் செப்டம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறும்”, என்று அறிவித்தார்.