தம்மை விரும்பாதவர்களைப் பின் தொடர்ந்து சென்று, எப்படியாவது அவர்களைத் தம்மை விரும்பச் செய்யுமாறு மாற்றிவிடலாம் என்று நினைப்பவர் கொள்ளும் அற்பமான உறவு, தனது ஒரு கையால் கல்லை எடுத்து இன்னொரு கையை அடித்துப் போக்கிக் கொள்வது போலாகும்.
தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணக்குதும் என்பர் – புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.
நாலடியார் : பாடல்-336
உரை:
நல்ல தளிர்கள் நிறைந்த புன்னை மலர்தற்குரிய கடற்கரையையுடைய வேந்தனே! தம்மிடம் விருப்பம் இல்லாதார் பின் சென்று, ‘அவரை எம்மிடம் விருப்பம் உள்ளவராகச் செய்வோம்’ என்று நினைப்பவர் கொள்ளும் அற்பர் உறவு. கல்லைக் கிள்ளிக் கையைப் போக்கிக் கொள்வது போலாம்.
O lord of the sea-shore where the punnei tree with fair blossoms grows! The worthless friendships of those who say, We will make them our own, while they follow those who have no friendship for them, is like losing one’s arm in striking another with a stone.
இதனை அடுத்த பாடலும் இதுபோன்ற கருத்தையே வலியுறுத்துகிறது.
ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; – யாதும்
கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.
நாலடியார் : பாடல்-337
உரை:
எறும்புகள், தம்மால் கொள்ள முடியாது எனினும், ஒரு பாத்திரத்தில் நெய் இருக்குமானால், அப்பாத்திரத்தின் மேலே சுற்றிக்கொண்டேயிருக்கும். அதுபோல ஒன்றும் கொடாதவராயினும் பொருள் உள்ளவரைச் சார்ந்த பேதைகள் அவரை விடாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
As the ants without intermission walk round and round the outside of the pot in which there is butter, though it be impossible to get at it, so men of the world will never learn, but cleave to those rich men who never give them anything.