உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இம்மருத்துவமனையில் பிராண வாயு விநியோகிக்கும் நிறுவனத்துக்கு ரூ.69 லட்சத்தை அரசு வழங்காமல் நிலுவை வைத்ததன் நிமித்தம், அந்நிறுவனம் ஆக்ஸிஜன் வழங்கியதை நிறுத்தியதால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் 100வது வார்டில் என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்கத்தால் துன்பப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்த 100வது வார்டு ஆண்டுதோறும் குறிப்பாக மழை காலத்தில் செய்திகளில் அடிபடும் ஒன்றாக விளங்குகிறது.
இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தெரிந்த பின்னரும் மருத்துவமனை அதிகாரிகள் கூடுதலான ஆக்ஸிஜனை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த மருத்துவமனையில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 30 என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், உள்ளூர் செய்தித்தாள் இறந்தோரின் எண்ணிக்கையை 50 என்று குறிப்பிட்டுள்ளது.
இதேவேளையில், குழந்தைகளின் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையே காரணம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூற மறுத்துள்ளது. ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானவை என்று உத்தரப்பிரதேச மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கி வருவதற்கு கட்டணம் செலுத்தாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் கடிதத்தை ஆக்ஸிஜன் விநியோக நிறுவனம் பிஆர்டி மருத்துவ கல்லூரியின் முதல்வருக்கு எழுதியுள்ளது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போதைய அரசு அறிவிப்பின்படி, பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையின் முதல்வர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆக்ஸிஜன் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டதை அரசு ஒத்துக்கொண்டாலும், குழந்தைகள் இறப்பிற்கு அது காரணமில்லை என்றும் உ.பி. சுகாதார அமைச்சர் சிதார்த் நாத் சிங் கூறியுள்ளார். இருப்பினும், உயிர்காக்கும் ஆக்ஸிஜன் 2 மணி நேர அளவில் நிறுத்தப்பட்டால் அது செலுத்தப்பட்டிருக்கும் நோயாளிகள் நிலை பாதிக்கப் படாதா என்பதற்கு அரசு தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்படவில்லை.
இம்மருத்துவமனை, உ.பி. முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியில் அமைந்துள்ளது. முதல்வரின் தொகுதியிலுள்ள மருத்துவ மனையிலேயே இப்படியென்றால், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என பலரும் கேட்கின்றனர்.