மருத்துவ படிப்பிற்கான, நீட் தேர்வு தொடர்பான பல வழக்குகளில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தொடர்ந்து பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், 85% இட ஒதுக்கீடு குறித்தான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி வினாக்களுக்கும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மொழி வினாக்களுக்கும் வேறுபாடு இருந்ததாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மதுரை ஐக்கோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மாணவர்களின் மனுவை விசாரித்த மதுரை ஐக்கோர்ட் கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடை காலத் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. (CBSE) மேல்முறையீடு செய்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட் விசாரணையின் போது நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டு அதன் பின்னர் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று நடைபெற்ற அடுத்த கட்ட விசாரணையின் போது, நீட் தேர்வு முடிவுகளை தற்போது ரத்து செய்ய முடியாது; நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது; சுமார் 11 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதி, 6.11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பேர் தேர்ச்சி பெற்று கவுன்சிலிங்கும் துவங்கி விட்டது; இந்நிலையில் நீட் தேர்வு முடிவிற்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதைத்தவிர தமிழகத்தின் 85% ஒதுக்கீடு குறித்த வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசு, மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிக் கடந்த ஜூன் 22ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், சென்னை ஐக்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி, 85 சதவீத உள்ஒதுக்கீடு என்பது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 14ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை ஐக்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் பின்னர், ஐக்கோர்ட் நீதிபதிகள் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 31ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், மருத்துவ கலந்தாய்வு தாமதம் ஆவதால் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனத் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கினை, நாளை அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது.