அதிமுக-வின் கோஷ்டிகளிடையேயான அதிகாரப் போட்டி தீவிரமடைந்து உள்ளது. பா.ஜ.க.-வுக்கு கட்டுப் பட்டு நடக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிகளை இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதற்கு பதில் அறிவிப்பாக தினகரன், “என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நான் நினைத்தால் முதல்வரை நீக்கலாம். ஆட்சிக்கு ஆபத்து வரக் கூடாது என்ற அக்கறை உள்ளது” என்றார். மேலும், “மடியில் கனம் இருந்தால் தானே பயம். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கும், 420களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றும் கூறினார்.
முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “ஜெயலலிதாவால் 19.12.2011 தேதியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் கடந்த 14.2.2017 தேதியில் அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு அவரை 15.2.2017 தேதியில் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிமுகவின் சட்டத்திட்ட விதி 30.(5)க்கு விரோதமானது. அவர் தொடர்ந்து 5 ஆண்டுகால அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தினால் அவரால் அதிமுகவின் எப்பொறுப்பையும் சட்டத்திட்ட விதிகளின்படி வகிக்க இயலாது.” என்று கூறப்பட்டுள்ளது.
இதன் பின்னர், வேறொரு அறிவிப்பில் சசிகலாவையும் பதவி நீக்கம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இவ்வறிவிப்புகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் விருப்பத்திற்கிணங்கவே செயல்படுத்தப் படுவதாக அதிமுக அணியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு குறித்து, தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் கூறியதாவது:
“ஈபிஎஸ் எப்போது தேர்தல் கமிஷனர் தலைவர் ஆனார் என்று தெரியவில்லை. ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அதிமுக பெயரில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.”
“என்னை நீக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆணையை மீறிய செயல். தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஆவணத்தில் என்னை துணைப் பொதுச் செயலாளர் என்று கொடுத்துள்ளனர். அப்படி இருக்கும் நிலையில் கையெழுத்து போட்டு இருக்கும் அனைத்து தலைவர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலக வேண்டியது இருக்கும். தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தால் பழனிச்சாமியும் பதவி விலக வேண்டியது வரும்.”
“நான் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல இருப்பதை அறிவித்து இருந்த நிலையில் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். நான் அன்றே சொன்னேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் சுற்றுப் பயணம் செல்ல உள்ளேன் என்று சொன்னேன். இவர்கள் பயத்தில் உள்ளனர். சட்ட விதிகளை தெரிந்தும் தவறாக செய்கின்றனர். சின்னம்மா அவர்களை நியமனம் செய்தது நியாயமானது என்று ஒத்துக் கொள்கின்றனர். ஆனால், என்னை ஒத்துக் கொள்ளவில்லை. திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்து, கட்சிப் பணம் எடுக்க அனுமதித்துள்ளோம். அவருக்கும் ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது.”
“தீர்மானத்தில் அதிமுக என்று குறிப்பிட்டு இருப்பது தவறானது. கட்சி சின்னத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவை அடுத்து அதிமுக அம்மா என்ற பெயரை பயன்பத்துகிறோம். ஆனால், அவர்கள் அதிமுக என்று பயன்படுத்தியதே தவறு.”
“அம்மா கூறியதுபோல் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. மடியில் கனம் இருந்தால் தானே பயம். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கும், 420களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்னை வெளியேற்ற வேறு யாரும் அழுத்தம் கொடுத்ததாக நான் நினைக்கவில்லை. அமைச்சர்களே பயந்து கொண்டுள்ளனர்.”
“தேர்தல் ஆணையத்தில் ஒன்று பேசுகின்றனர். புரட்சித் தலைவர் மறைவுக்குப் பின்னர் அம்மாவுடன் இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறோம். இவர்கள் ஆட்சியில் இருந்து கிடப்பதை சுருட்டி கொண்டு செல்லவுள்ளனர். அவர்களைப் போல எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்ய மாட்டேன். நாங்கள் செயலில்தான் காட்டுவோம். அதில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.”
இவ்வாறு அவர் கூறினார்.