அமெரிக்க அதிபர் டிரம்ப் வட கொரியாவிற்கு விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, மேற்கு பசிஃபிக் பெருங்கடலிலுள்ள அமெரிக்கப் பகுதியான குவாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த வட கொரியா தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏவுகணைக்குள் பொருத்தக் கூடிய அளவில் அணுவாயுதம் ஒன்றை வெற்றிகரமாக வடகொரியா தயாரித்ததாக வெளியான தகவலை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், “வடகொரியாவின் அத்துமீறல்களுக்கு நெருப்புடன் கூடிய கோபத்துடன் பதில் கொடுக்கப்படும்; உலக நாடுகள் இதுவரை கண்டிராத கடும் நெருக்கடியை வடகொரியா எதிர்கொள்ள நேரிடும்; ஆகவே அமெரிக்காவுடன் மோதுவதை அந்த நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இது பற்றி வடகொரியா தரப்பில் வெளியான அறிக்கையில், “அமெரிக்காவின் பசிபிக் பகுதியில் உள்ள தீவான குவாம் பகுதியை தாக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்டங்களை கவனமாக பரிசோதித்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வட கொரியாவின் அரசு ஊடகத்தில், “அதிபர் கிம் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவரிடமிருந்து அனுமதி வந்தவுடன் செயல்படுத்துவோம்” என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் குறித்து குவாம் கவர்னர் கூறும்போது, ”நாங்கள் வெறும் ராணுவம் தடவாள பகுதி மட்டுமல்ல, அமெரிக்காவின் மண். குவாம் எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள தயராக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து வெள்ளை மாளிகையுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்றார்.
ஜப்பானிய மற்றும் தென் கொரிய சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமான குவாம், அமெரிக்காவின் தாட் (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மூலம் பாதுகாக்கப்படுகிறது.