இன்று ராஜ்யசபாவில் இரண்டு வெவ்வேறு விதமாக ரூபாய் நோட்டுக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் சரத்யாதவ் இதுதொடர்பான ரூபாய் நோட்டுகளின் மாதிரிகளை காட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெரிக் ஒ’பிரையன் உள்பட சில உறுப்பினர்களும் 500 ரூபாய் நோட்டுகளை காட்டினர்.
காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் பேசியதாவது: மத்திய அரசு ஏன் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை எடுத்தது ஏன் என இப்போது தான் எங்களுக்கு தெரியவருகிறது. ரிசர்வ் வங்கி இரண்டு விதமான ரூ.500 நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது. இதன் வடிவம் மற்றும் அமைப்பு வெவ்வேறாக உள்ளது. இது எப்படி சாத்தியம் என்றார். அது குறித்து மாதிரி படத்தை காட்டினர்.
ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸின் குலாம் நபி ஆசாத், இது நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்று குற்றம் சாட்டினார்.
அருண் ஜெட்லி பேசுகையில் விதிமுறைகளில் எந்தஒரு ஷரத்தும் கிடையாது எந்தஒரு பேப்பரையும் காட்டுவதற்கு என்றார். இப்போது நடந்துக் கொண்டு இருக்கும் பூஜ்ஜிய நேரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றார் அருண் ஜெட்லி.
மாநிலங்களவை தேர்தலில் நோட்டா கொண்டுவரப்பட்டது தொடர்பாக அவர்கள் முதலில் பேசினார்கள், பின்னர் அவர்கள் ஆட்சியின் போதுதான் இந்த விதிமுறையானது கொண்டுவரப்பட்டது என்பதை தெரிந்துக் கொண்டார்கள் என்பதை ஜெட்லி சுட்டிக் காட்டினார்.
சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இவ்விவகாரத்தில் ஆசாத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உடன் வாதம் நீடித்த நிலையில், இந்த ரூபாய் நோட்டுக்களை எங்கிருந்து பெற்றீர்கள் என ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக நோட்டீஸ் கொடுக்க சபாநாயகர் கேட்டுக் கொண்டார். இவ்விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக அவை அடுத்தடுத்து ஒத்திவைக்க நேரிட்டது.