காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் செயல்பாடுகள்: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் அராஜகச் செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.  எனவே அனைவரும் ஒன்றிணைந்து  மோடி, அமித் ஷா ஆகியோர் கொடுக்கும் சவால்களைச் சந்திக்க வேண்டும் என்று  ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வழக்கமான அணுகுமுறை மோடி, ஷா கூட்டணிக்கு எதிராக ஒருபோதும் செல்லுபடியாகாது  என்று ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 1996-2004 இடையே அதிகாரத்தில் இல்லாத போது தேர்தலில் வெற்றிபெற வேண்டிய  நெருக்கடியைத்தான் காங்கிரஸ் சந்தித்து வந்தது. எமெர்ஜன்சிக்குப் பிறகான 1977-லும் தேர்தல் நெருக்கடியைத்தான் சந்தித்து வந்தது.

ஆனால் இன்று காங்கிரஸ் சந்தித்து வருவது அது ஒரு கட்சியாக தொடர்வதற்கே விடுக்கப்பட்ட  நெருக்கடி மிகுந்த சவாலாகும். இது தேர்தல் நெருக்கடி அல்ல. கட்சி தொடர்ந்து செயல்படுவதைக் குறித்த ஆழமான நெருக்கடியில் இருக்கிறது.

நாம் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக நிற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, வித்தியாசமாகச் செயல்படுகிறார்கள். எனவே நாமும் நம் அணுகுமுறையை மாற்றாவிட்டால்,  நாம் தொடர்பற்று போய்விடுவோம், அன்னியப்பட்டுப் போய்விடுவோம், இதனை நான் உள்ளபடியே கூறுகிறேன்.

காங்கிரஸ் கட்சி இந்தியா மாறிவிட்டது என்பதை அங்கீகரிக்க வேண்டும். பழைய கோஷங்கள் எடுபடாது, பழைய உத்திகள் செல்லாது. பழைய மந்திரங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்தியா மாறிவிட்டது, காங்கிரஸ் கட்சியும் மாற வேண்டும்.

2017 இறுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்று நினைக்கிறேன். 2019 தேர்தலில் மோடிக்கு வலுவான சவால் அளிக்க வேண்டுமெனில் தனிநபர் மந்திரக்கோல் உதவாது மாறாக கூட்டு பலத்தையே மோடிக்கு எதிராக நம்பவேண்டும். நம்மிடமிருந்து அதிகாரம் போய் விட்டது, ஆனால் இன்னமும் சுல்தான்கள் போல் சிலர் நடந்து கொள்கின்றனர். நாம் சிந்திக்கும் முறையையே மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.

காங்கிரஸ் மீது மக்களுக்கு நல்லெண்ணம் உள்ளது, ஆதரவும் உள்ளது ஆனால் மக்கள் புதிய காங்கிரஸைக் காண விரும்புகின்றனர். பழைய மந்திர உச்சாடனங்களை அவர்கள் விரும்பவில்லை. இதனை உண்மையான, மிகப்பெரிய சவாலாக காங்கிரஸ் கருத வேண்டும்.

நிதிஷ் குமார் விவகாரம் குறித்து தனிப்பட்ட முறையில் நான் அதிர்ச்சியடைந்தேன், ஆழமான ஏமாற்றமடைந்தேன். ஆனால் இதைப்பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை, நாம் மேலே முன்னேறிச் செல்ல வேண்டும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top