ஐ.நா.வினால் ஒப்புதலளிக்கப்பட்ட வட கொரியாவிற்கான தடைகள் குறித்தான தீர்மானத்திற்கு “ஆயிரம் மடங்கு” அதிகமாக கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
இவ்வறிவிப்பு, ஐ.நா.வினால் வட கொரியாவின் மீது விதிக்கப்பட்ட, 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீதான தடைத் தீர்மானம் நிறைவேறிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது. மேற்படி தடைகள் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வட கொரிய அரசு ஊடகத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமது நாட்டை “தனிமைப்படுத்தி, தடுத்து நிறுத்துவதற்கு” உருவாக்கப்பட்ட அமெரிக்க சதித்திட்டம் “அதன் இறையாண்மையின் வன்முறை மீறல்” ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகள், வட கொரியாவின் அணுசக்தி திட்டத்தைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது அதன் அணுசக்தி திறனை வலுப்படுத்த முற்படுவதை தடுக்கவோ செய்யாது என்று அதில் கூறுப்பட்டுள்ளது. வட கொரியா விரைவில் ” ஒரு நீதி நடவடிக்கை எடுக்கும்” என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் என்ன நடவடிக்கை என்பதன் விபரம் தெரிவிக்கப்படவில்லை.
ஆசியன் மாநாட்டில் வட கொரியாவிற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட வலியுறுத்தல்
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியன் மாநாட்டில் பங்குபெற்ற அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரிகள், வடகொரியாவிற்கு அனைத்து உலக நாடுகளும் அதிக நெருக்கடி கொடுக்க வேண்டுமென கூட்டாக அறிவித்தனர்.
அந்த அறிக்கையில், “வடகொரியா தற்போது கையாண்டுவரும் அச்சுறுத்தும் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட அனைத்து நாடுகளும் அந்நாட்டிற்கு அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும். தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது கூடுதல் இராஜதந்திர மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்நாட்டிற்கு எதிராக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தடைகளை கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.