திருச்சி விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்.-ஐ தாக்க முயற்சி

தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் குத்த ஒருவர் முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகிய 3 பேரும் இன்று 11 மணி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்தனர்.  அவர்களை வரவேற்க 3 பேரின் ஆதரவாளர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை சிவகாசியில் நடைபெறும் எம். ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.
ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியாக வெளியே வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்டு அவரது ஆதரவாளர்களும் சென்றனர். விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு அளித்து சென்றனர்.
அப்போது ஆதரவாளர்களில் ஒருவர் ஓ.பன்னீர் செல்வத்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பாதுகாப்பு படையினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே கூட்ட நெரிசலில் சிக்கிய அந்த நபரின் வேட்டி அவிழ்ந்தது. அப்போது அந்த நபரின் இடுப்பில் இருந்து கத்தி ஒன்று கீழே விழுந்தது. அவர் ஓ.பன்னீர்செல்வத்தை கத்தியால் குத்த முயன்றதாகவும் தெரிகிறது. இதையடுத்து அந்த நபரை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

அவரை போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருச்சி டி.வி. எஸ். டோல்கேட் வில்வ நகரை சேர்ந்த சோழராஜன்  என்பது தெரிய வந்தது.

சந்தேகத்திற்குரிய நபர் தெரிவித்ததாவது :
 நான் ஓ.பி.எஸ்.ஆதரவாளராக இருந்து வருகிறேன். இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றேன். அப்போது அங்குள்ள ஆவின் பாலகம் அருகே கீ.செயினுடன் இணைந்த சிறிய கத்தி ஒன்று கிடந்தது. அதை எடுத்து எனது இடுப்பில் சொருகி கொண்டேன். பின்னர் ஓ.பி.எஸ். வரவேற்பதற்காக சென்றேன்.
அப்போது இடுப்பில் வைத்திருந்த கத்தி கீழே விழுந்தது இதைப் பார்த்தவர்கள் நான் ஓ.பி.எஸ்.சை தாக்கத்தான் வருகிறேன் என்று தவறாக புரிந்து கொண்டு என்னை அடித்து உதைத்து விட்டனர்.
நான் அவரின் தீவிர ஆதரவாளன். அவரை வரவேற்கத்தான் சென்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் பற்றி ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

என்னை தாக்க வந்ததாக கூறப்படும் சம்பவம் தற்செயலாக நிகழ்ந்தது. தமிழக மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top