40 ஆயிரம் பேரின் ஆதார் தகவல்களை திருடியதாக ஓலா நிறுவனத்தின் பணியாற்றிய, காரக்பூர் ஐஐடி – யில் படித்த, 31 வயது பெங்களூரு மென்பொருள் பொறியாளர் அபினவ் ஸ்ரீவத்சவை (Abhinav Srivastav) பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
இவர் ஆதார் தகவல்களை சட்ட விரோதமாக கையாடல் செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அவரை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய அரசின் தனிநபர் அடையாள ஆணைய சர்வரை முடக்கி தகவல்களை திருடியதை ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் கடந்த ஜனவரி மாதம் ‘Aadhaar e-KYC’ என்ற ஆப் மூலம் ஆதார் தகவல்கள் பலவற்றை திரட்டியுள்ளார். இந்த ஆப் சமீபத்தில் கூட கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தது. இதுபோன்ற 5 ஆப்களை உருவாக்கி, அதில் வரும் விளம்பரங்கள் மூலமாக ரூ.40,000 வருவாய் ஈட்டியுள்ளார். ‘Aadhaar e-KYC’ ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து சுமார் 50,000 முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
e-Hospital என்ற ஆப்-பிற்காக தகவல் சரிபார்ப்பு செல்போன் செயலியை அபினவ் உருவாக்கியதுடன், அதை கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெறச் செய்து ஆதார் தகவல்களை திருடியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது அதிகாரபூர்வ பயனாளர் முகமையைச் சேர்ந்த ஆப் ஆகும். தனது ‘Aadhaar e-KYC’ ஆப்-பிற்கு அதிகாரபூர்வ தன்மை வேண்டும் என்பதற்காக தேசிய தரவுப்பாதுகாப்பு சர்வரை அபினவ் ஹேக் செய்துள்ளார். அதில்தான் இ-ஹாஸ்பிடல் சிஸ்டம் உள்ளது. இந்த சர்வரில்தான் அரசு மருத்துவமனைகளின் மருத்துவப் பதிவு மேலாண்மை விவரங்கள் அடங்கியுள்ளன என்று கூறியுள்ளது போலீஸ்.
Pingback: ஆதார் தகவல்கள் திருட்டு : பெங்களூரு மென்பொருள் பொறியாளர் கைது – thenthidal | தென் திடல்