அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். முன்னதாக அவர் ஆகஸ்டு 5-ம் தேதி அதிமுக தலைமைக் கழக கட்டிடத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழையப் போவதாக அறிவித்திருந்த கெடு இன்னும் 2 நாட்களில் வருகிறது. இன்னிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணியின் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் பழனி சாமிதான் வழிநடத்தி வருகிறார். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்று கூறியுள்ளார். ஆகவே பெரும் பரபரப்பை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலாவை தினகரன் இன்று சிறையில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. முன்பு சிறையில் சசிகலாவைச் சந்திக்கச் சென்றால், அரை மணி நேரத்தில் பார்க்க முடியும். இப்போது ஒன்றரை மணி நேரம் ஆகிறது. சிறையில் எல்லோருக்கும் அளிக்கப்படும் உணவே அவருக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு பழங்கள் மட்டுமே வாங்கிச்சென்றேன். சசிகலா மீது புகார் கூறியது தொடர்பாக டிஐஜி ரூபா மீது நிச்சயமாக அவதூறு வழக்கு தொடரப்படும்” என்று கூறினார்.
சிறையில் சந்தித்துப் பேசுகையில் சசிகலா, தினகரனிடம் எடப்பாடி பழனிசாமி அணியிடமும், ஓ.பி.எஸ். அணியிடமும் சமரசமாகப் பேசி முடிவு எடுக்க ஆலோசனை கூறியதாகவும், ஆக. 5-ல் தலைமைக்கழகத்தில் நுழைவதைக் குறித்து யோசித்து செயல்படவும் அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. சசிகலா தரப்பின் நிலைமை தற்போது சரியில்லாததால், தினகரன் நிதானமாக முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமது ஆதரவை பெருக்க முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது.
Pingback: பரபரப்பில் அதிமுக: தினகரனின் ஆக்.5 கெடுவும் எடப்பாடி தரப்பு பதிலும் – thenthidal | தென் திடல்