சென்னை கடற்கரையிலுள்ள காமராஜர் சாலையிலிருந்து நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலினால் இந்த சிலை அகற்றப்பட்டதாகவும், விரைவில் அடையாறில் கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்திற்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், புதிதாக மெரினா கடற்கரையில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என சிவாஜி மகன்களான ராம்குமாரும் பிரபுவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ராம்குமார் மற்றும் பிரபு கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவை ஏற்று, அரசு சிலையை அகற்றுகிறது. அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளோம். கோர்ட்டை மதிக்க வேண்டியது நமது கடமை. எனவே அரசு நடவடிக்கையை ஏற்கிறோம். மெரீனா கடற்கரையில் தலைவர்கள், புலவர்கள், அறிஞர்கள் சிலைகள், கண்ணகி சிலை, உழைப்பாளர் சிலைகள் உள்ளன. எனவே நடிப்புக்கு பெருமை சேர்த்த தமிழர் சிவாஜி கணேசனுக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவாஜி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் இந்த வேண்டுகோளை வைத்து இருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக இருந்தவர் சிவாஜி. எனவே கடற்கரையில் உள்ள தேசத் தந்தை காந்தி, பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு இடையே, சிவாஜிக்கு புதிய சிலை அமைக்கும் முயற்சியை சிவாஜி ரசிகர் மன்றம் மூலம் நாங்கள் செய்வோம். இதற்கான அனுமதியை சட்டப்பூர்வமாக அரசிடம் பெற வற்புறுத்துவோம். எங்கள் குடும்பத்தினரும் சேர்ந்து இதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Pingback: நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டு வெறு இடத்திற்கு மாற்றப்படும் – thenthidal | தென் திடல்