ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விலகினார். அவருக்குப் பதிலாக, பாகிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக ஷாகித் காகான் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நவாஸ் ஷெரீஃபின் தம்பியும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீஃப்பை பிரதமராக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு முன்னதாக இருந்தது. ஷாபாஸ் ஷெரீஃப் தற்போது பாராளுமன்ர உறுப்பினராக இல்லையென்பதால் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆக வேண்டும். ஆகவே, அதுவரை இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று, இதற்கென நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 341 உறுப்பினர்களில் இவர் 221 வாக்குகளைச் சேகரித்து வெற்றி பெற்றார். எதிர்க்கட்சியினர் 3 வேட்பாளர்களைக் களமிறக்கினர், அவர்கள் அனைவரும் சேர்ந்து 84 வாக்குகளையே பெற்றனர்.
புதிய பிரதமர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான ஒப்பந்தத்தில் ரூ.20,000 கோடி அளவுக்கு முறைகேட்டில் இவர் ஈடுபட்டிருப்பதாக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமைக் குழு 2015-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்துள்ளது.
ஆனால் அந்த வழக்கு விசாரணை மட்டத்திலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.