தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, எந்த இடத்தில் மருத்துவமனை அமைப்பது என்று டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், அதற்கான இடங்களை தேர்வு செய்து தெரிவிக்கவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது. தமிழக அரசு சில இடங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆனால் அதன் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான வேறு எந்த அறிவிப்பையும் மத்திய அரசு செய்யவில்லை. எந்த இடத்தில் மருத்துவமனை அமையும் என்றும் முடிவு செய்யவில்லை.
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும் என்பது இதுவரை மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. இது பற்றி உரிய அறிவிப்பு வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐக்கோர்ட் நீதிபதிகள், “தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். இடத்தை ஆய்வு செய்து முடிவு செய்ய 2 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஜனவரி 1-ல் அறிவிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.