தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இந்த பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இத்தொகுதில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று பகிரங்கமாக கூறி தேர்தல் ஆணையம் தோ்தலை நிறுத்தியது.
இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள வீடு, திருவேங்கை வாசலில் உள்ள கல் குவாரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, 5 கோடி ரூபாய் பணமும், பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சோதனையின் போது தோ்தல் தொடா்பாக யாா் யாருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பது தொடா்பான முக்கிய ஆவணங்கள் சிக்கிதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், இதன் தொடர் நடவடிக்கையாக வருமான வரித்துறையிடம் இருந்து புதுக்கோட்டை மாவட்ட பத்திரப் பதிவுத் துறைக்கு கடிதம் வந்துள்ளது. அதில், விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலம் மற்றும் கல் குவாரியை முடக்க அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும், அதன் அடிப்படையில் பத்திரப்பதிவு துறை நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.