அரசிதழில் அறிவிக்கப்பட்ட பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அமைச்சர் காமராஜ் விளக்கமளித்தார். “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு என்று பேசிப்பேசியே காலத்தைத் வீணடித்தது போல இதுவும் ஆகிவிடுமோ என்று தமிழக மக்கள் அஞ்சுகின்றனர்.
பொது விநியோகத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள், 5 ஏக்கர் நிலம், வருமான வரி மற்றும் தொழில் வரி செலுத்துபவர்களின் குடும்பத்துக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு சக்கர வாகனம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் ரேஷன் சலுகைகள் வழங்கப்படாது என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது என்றும் தமிழகத்திற்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவிநியோக திட்டத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை என தெரிவித்தார். விலையில்லா அரிசி திட்டம், பொது விநியோகத் திட்டம் ஆகியவை தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் உறுதிபட கூறினார்.
“நீட்” தேர்வை மத்திய அரசு கட்டாயம் ஆக்கிய நேரத்தில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப் படும் என்று தமிழக அரசு கூறிவந்தது. எனினும் தமிழக மாணவர்கள் அதனை எழுத வேண்டியிருந்தது. பின்னர் 85% தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தும் அதனை செயல் படுத்த முடியாமல் போனது. இதுபோல ரேஷன் பொருள்கள் விஷயத்திலும் நடைபெறுமோ என்று நடுத்தர மக்கள் அச்சப்படுகின்றனர்.