உத்தரகண்ட் – சமோலி மாவட்டத்திலுள்ள பரகோட்டில் எல்லை தாண்டி 1 கி.மீ உள்ளே புகுந்து சீன ராணுவம் அத்துமீறியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், சீன அதிபர் க்ஸி ஜின்பிங்-கை இன்னும் 3 நாட்களில் சந்தித்துப் பேசுவதாக இருக்கும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
10லிருந்து 12 சீன ராணுவ வீரர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்ற ஆண்டு ஜூலை மாதத்திலும், சீன ராணுவத்தினர் 200 மீட்டர்கள் பரகோட்டில் எல்லை கோட்டைத் தாண்டி வந்துள்ளனர். அச்சமயத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் , எல்லை சரியாக குறிக்கப்படாததால் இரு தரப்பினருக்கும் தமது எல்லை எதுவரை என்று தெரியாமல் இருந்திருப்பதால் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.
உத்தரகண்டில் இந்திய-சீன எல்லை 350 கி.மீ. தொலைவு வரை இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் முன்பும் நிகழ்ந்திருப்பதாக தெரிய வருகிறது.
இதற்கு சில நாட்களுக்கு முன்னர், வட கிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லையை ஒட்டிய, டோகோலாம் பகுதியை சொந்தம் கொண்டாடிய சீனா, அப்பகுதியில், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதை தடுத்து நிறுத்தச் சென்ற நம் வீரர்களுடன் கை கலப்பில் ஈடுபட்ட சீன வீரர்கள், நம் நாட்டு எல்லையில் அத்துமீறி நுழைந்தனர். பின், நம் வீரர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியா – சீனா – பூடான் நாடுகளுக்கு இடைப்பட்ட பொது இடத்தை, சீனா தனக்கு சொந்தம் கொண்டாடியதுடன், இந்தியா, பூடான் எல்லையையும், சீனாவுடன் சேர்த்து, சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டது.
இதன் பின்னணியில், தற்போதைய சீன ராணுவத்தின் அத்துமீறல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.