அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற புடின் முடிவு

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற ரஷ்யாவின் அதிபர் புடின் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஜனநாயகக் கட்சியினராலும், ஊடகங்களாலும், சில குடியரசு கட்சியினராலும்  எழுப்பப் பட்டிருந்தது.

மேலும், அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும்  ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதினிமித்தம், மேற்கண்ட நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதிபர் டிரம்ப்பின் கையெழுத்திற்காக அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் விளைவாக, ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளில் 755 பேர் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஷ்ய வெளியுறவுத் துறை, அங்குள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 455-ஐ தாண்டக்கூடாது என அமெரிக்கத் தூதரகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையேயான பனிப்போரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top