அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள ஹாணலுலு நகரில் மொபைல் ஃபோன் குறித்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி சாலையில் செல்லும் பாதசாரிகள் மொபைல் உபயோகித்தால் அபராதம் விதிக்கப்படும். பாதசாரிகள் குறுஞ்செய்தி அல்லது போனில் பேசிக்கொண்டே செல்வதால் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதைக் தடுக்கவே இத்தகைய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
சாலைகளில் டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்தினால் 15 முதல் 35 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த உத்தரவு வரும் அக்டோபர் மாதம் இறுதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது எனவும் நகர நிர்வாக தலைவர் கிர்க் கால்டுவெல் தகவல் தெரிவித்துள்ளார்.
முதலில் அபராதம் செலுத்திவிட்டு பின் தொடர்ந்து அந்த தவறை திரும்ப செய்தால் 99 டாலர்கள் வரை அபராதம் விதிக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக இந்த தடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சாலைகளிலும், நடைபாதைகளிலும் டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் போன்கள் பயன்படுத்திக் கொண்டே சென்றதால் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 11,000 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஆக்ஸ்பர்க் நகரில் சாலை விபத்துகளை தவிர்க்க இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.