ஜிஎஸ்டி வரி விதிப்பினால் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும், சகல பெருட்களின் விலைகளும் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மான் கி பாத் நிகழ்ச்சியில் இன்று வானொலியில் உரையாற்றிய நரேந்திர மோடி, சிறந்த முன்மாதிரியான திட்டத்துக்கு இது ஒரு உதாரணம் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கண்காணித்து வருகிறோம். அங்கு மத்திய மாநில அரசுகள் மீட்பு பணிகள் ஈடுபட்டுள்ளன. மீட்பு படையினர் தன்னலமில்லாமல் உழைத்து வருகின்றனர். நிவாரண பணிகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. உலக வெப்பமயமாதலால் எதிர்மறை பாதிப்பு ஏற்படுகிறது.
ஜிஎஸ்டி குறித்து நல்ல செய்தி வந்த வண்ணம் உள்ளது. ஜிஎஸ்டி பலன்கள் தெளிவாக உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியுள்ளது. தொழில் செய்வது எளிதாகியுள்ளது. நாட்டின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. தினசரி உபயோகபடுத்தப்படும் பொருட்கள் விலை வெகுவாக குறைந்துள்ளது. அனைவருக்கும் முன்மாதிரியான திட்டத்தை அமல்படுத்தியுள்ளாம். இந்தியாவின் பலத்திற்கு ஜிஎஸ்டி உதாரணம்.
நமது வரலாற்றில் ஆகஸ்ட் மாதத்திற்கு சிறப்பான இடம் உள்ளது. ஆகஸ்ட்டில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகஸ்ட் மாதம் துவங்கியது. இந்த போராட்டத்தை மகாத்மா காந்தி ஆரம்பித்த போது முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த கட்டத்தில் இருந்த தலைவர்கள் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக செய்து காட்டினர். போராட்டத்தில் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொண்டனர்.
நாடு சுதந்திரம் பெற்று 70 வருடங்களாகி விட்டன. நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்கின்றனர். வேலைவாய்ப்பை உருவாக்கவும், வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாம் பல சாதனைகள் படைத்துள்ளேம். அதேநேரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.