வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை பொருளாதார ரீதியாக சீனாவும், ரஷ்யாவுமே ஊக்குவிக்கின்றன என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.
நேற்று டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவில் இருந்து வளர்ந்துவரும் அணுசக்தி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
வெள்ளிக்கிழமை வடகொரியா நடத்திய ஹுவாசாங்-14 ஏவுகணையை சோதித்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்திய வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் குறித்து கூறுகையில், “வடகொரியாவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்றது, ஆபத்தானது. உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் வடகொரியாவின் இந்த ஏவுகணை நடவடிக்கைகள் அந்நாட்டை தனிமைப்படுத்தும், அதன் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும்” என்று கூறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க செனட் சபை வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நிறைவேற்றிய சில மணி நேரங்களில் வடகொரியா இந்த புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.