பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர்ப் பலகை வைப்பதற்கு எதிராக கன்னட அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர்ப்பலகை வைக்கலாகாது என எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
அண்மையில் கன்னட அமைப்பினர் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி பெயர்ப்பலகைகளை தார் பூசி அழித்தனர். மேலும் மெட்ரோ வில் பணியாற்றும் இந்தி பேசும் அதிகாரியை இடமாற்றம் செய்யக் கோரியும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதல்வர் சித்தராமையா நேற்று எழுதிய கடிதத்தில், “பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டமானது மத்திய, மாநில அரசுகளின் சரிபாதி நிதியில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் மும்மொழி திட்டத்தின்படி இந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் பெயர்ப்பலகை மற்றும் அறிவிப்பு இடம்பெற்றுள்ளன.
இந்தி பேசாத மாநிலமான கர்நாடகாவில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப் பலகை வைக்க வேண்டும். இந்தியில் பெயர்ப்பலகை கூடாது என பெங்களூருவில் கன்னட அமைப்பினரும், எழுத்தாளர்களும் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தி பெயர்ப்பலகைகளை மறைத்தும், தார் பூசி அழித்தும் வருகின்றனர்.
பெங்களூருவில் இந்தி தெரியாத மக்கள் அதிகளவில் வாழ்வதால் இந்தியில் பெயர்ப்பலகை தேவை யில்லை. மேலும் இந்தி பெயர்ப் பலகை மாநில மக்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது. எனவே இந்தியில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இனிவரும் காலத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகை வைக்க வேண்டும். மிகவும் உணர்வுப்பூர்வமான இந்த விஷயத்தில் கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சித்தராமையாவின் கடிதத்துக்கு கன்னட அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.