குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ததையடுத்து, மீதமுள்ளவர்களை பாதுகாக்க 44 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு பெங்களூரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
குஜராத்தில் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். அதில் மூன்று பேர் பா.ஜ.க.வி. இணைந்துவிட்டனர். பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலை மேலும் தொடராமல் தடுக்க எஞ்சிய எம்.எல்.ஏ.க்கள் 44 பேரும் இரவோடு இரவாக பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சொந்த ஊரில் இருக்கும் பட்சத்தில் பிரதமர் நரேந்திர மோடியோ, பாஜக கட்சியினரோ குதிரைபேரம் நடத்தி அவர்களை மிரட்டி தங்களது பக்கம் வளைத்துவிடுவார் என்பது காங்கிரசாரின் அச்சம்.
மானிலங்களவை வேட்பாளர்களாக பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் களமிறங்குகிறார். பட்டேல் வெற்றி பெற வேண்டுமானால் கண்டிப்பாக 44 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளும் தேவை. எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் குறைந்தால் கூட அவர்களது வெற்றி கேள்விக்குறி ஆகிவிடும். இதை தடுக்கவே கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைத்தது போலவே, குஜராத்தை விட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி நடத்தும் கர்நாடகாவில் அவர்கள் சில நாட்கள் தங்க வைக்கப்படுவதே பாதுகாப்பு என்று கருதி அந்த கட்சி இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.