தமிழக பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் எடுத்த துறை தவிர, வேறு துறைகளிலிருந்து 2 விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் ‘அரியர்’ எனப்படும், தோற்ற பாடத்தை பின்வரும் பருவத் தேர்வுகளுடன் சேர்த்து எழுதும் முறை ஒழிக்கப்பட்டு, புதிய தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது.
இதுகுறித்து கல்விக்குழு டீன் டி.வி.கீதா கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் போது அவர் வேறு ஒரு துறையில் கண்டிப்பாக அவரது விருப்பப்படி 2 பாடங்களை தேர்ந்து எடுத்து படிக்க வேண்டும். இந்த முறை ஏற்கனவே இந்த 4 கல்லூரிகளிலும் அமலில் உள்ளது. இந்த கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள 518 பொறியியல் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
தற்போதைய கிரேடு முறையில் பின்வரும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது:
‘0’ = மிகச்சிறப்பு = 10 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 91 முதல் 100 வரை.
‘ஏ+’ = சிறப்பு = 9 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 81 முதல் 90 வரை.
‘ஏ’ = மிகவும் நல்லது = 8 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 71 முதல் 80 வரை.
‘பி+’ = நல்லது = 7 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 61 முதல் 70 வரை.
‘பி’ = சராசரி நிலை = 6 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 50 முதல் 60 வரை.
50 மதிப்பெண்களுக்கு கீழே உள்ளவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.
புதிய பாடத்திட்டத்தின்படி ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் மாணவர்கள் மற்றொரு துறையில் குறைந்தது 2 விருப்ப பாடங்களையாவது படிக்க வேண்டும். உதாரணமாக மெக்கானிக்கல் பிரிவை எடுத்து படிக்கும் மாணவர், மெக்கானிக்கல் பிரிவில் உள்ள 2 பாடங்களுக்கு பதிலாக கணினி அறிவியல் பாடத்தில் ஏதாவது இரு பாடங்களை எடுத்து படிக்க வேண்டும். பி.இ. படிக்கும் போது 3-வது ஆண்டு கடைசியில் மாணவர்கள் 8.5 கிரேடு மதிப்பெண்கள் எடுத்திருந்து, அவர்கள் கடைசி ஆண்டு படிக்க முடியாவிட்டால் 5-வது ஆண்டு கல்லூரிக்கு வந்து 4-வது வருட படிப்பை தொடரலாம்.
இனி ‘அரியர்ஸ்’ என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒரு மாணவர் பி.இ. முதல் பருவ தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவருடைய ‘இன்டர்னல்’ மதிப்பெண் ரத்து ஆகிவிடும். அவர் மீண்டும் 3-வது பருவ தேர்வில் தேர்ச்சி பெறாத முதல் பருவத்திற்கான ‘இன்டர்னல்’ தேர்வை எழுத வேண்டும். பிறகு அவர் பருவ தேர்வை எழுத வேண்டும். அவர் விரும்பினால் தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய வகுப்பில் உட்கார்ந்து கேட்கலாம். தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய ‘இன்டர்னல்’, பருவ தேர்வை 7 ஆண்டுக்குள் எழுதலாம். இதனால் ‘அரியர்ஸ்’ என்ற வார்த்தை ஒழிக்கப்படுகிறது.
இவ்வாறு கல்விக்குழு டீன் டி.வி.கீதா கூறினார்.
Pingback: தமிழக பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்: ‘அரியர்’ முறை ஒழிப்பு – thenthidal | தென் திடல்