இந்தியாவின் 13-வது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவுற்றதை அடுத்து, இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக திரு. ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார்.
சரியாக நண்பகல் 12 மணி 7 நிமிடங்களுக்கு தேசிய கீதத்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரும், பிரணாப் முகர்ஜியும் மேடையில் இருக்கை மாறி அமர்ந்தனர். பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் முன்வரிசையில் அமர்ந்திருக்க, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் என நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குழுமியிருந்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்பு முடிந்ததும் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “பெருமை மிகு இந்த தேசத்தின் 125 கோடி மக்களுக்கும் தலைவணங்குகிறேன்” என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தான் மிகவும் எளிய பின்னணியில் பிறந்து வளர்ந்த தமது பயணம் நெடியது என்று குறிப்பிட்டார். தமக்கு முன்பிருந்த ஜனாதிபதிகளான ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் வழியில் செவ்வனே பணியாற்றப்போவதாகவும் கூறினார்.
தொலைதூர கிராமத்தின் மண் குடிசை வீட்டில் இருந்து வந்த தாம், ஜனாதிபதி என்ற உயரிய பொறுப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்வதாகவும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
நமது நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பெருமிதம் தெரிவித்த ஜனாதிபதி ஒற்றுமையில் வேற்றுமையே நமது வலிமை என்றார். நாட்டை கட்டமைப்பதில் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கிருப்பதாகவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.