அரசுக்கு எதிராக போராடிய மாணவர்களான திருமுருகன் காந்தி மற்றும் வளர்மதி ஆகியாரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளியதைத் தொடர்ந்து, தற்போது ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதியைக் கைது செய்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக இப்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி கைதுசெய்யப்பட்ட திவ்ய பாரதி தற்போது நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திவ்ய பாரதி அளித்த பேட்டியில், “தலித் மாணவர்களின் விடுதியில் சரியாக வசதிகள் செய்து தரபடவில்லை என்று நான் போராடி இருந்தேன் . மன்னர் கல்லூரியை சேர்ந்த சுரேஸ் என்ற மாணவர் பாம்பு கடித்து தனது அறையில் இறந்தார் . இந்த நிலையில்தான் தலித் விடுதிகளின் நிலைமை இருக்கிறது. இந்த மாணவர் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை தர வேண்டும் என்று போராடி இருந்தேன் . இவ்வாறு பல போரட்டங்களில் பங்கேற்று உள்ளேன்” என்றார்.
துப்புரவு தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான போரட்டங்களில் தொடர்ந்து திவ்ய பாரதி ஈடுபட்டுவருபவர். மேலும் தலித்துகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் இவர் போராடி வருகிறார்.
மாணவர் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் மத்திய – மாநில அரசுகள்
மெரினாவில் நடைபெற்ற மாணவர்ப் புரட்சிக்குப் பின்னர் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களைக் கண்டு குலைநடுங்கிப் போயுள்ளன அரசுகள். இதனால்தான் மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடும் மாணவர்களைத் தேடிப் பிடித்து குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளுகின்றன. முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதேபோல் நெடுவாசல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து துண்டறிக்கை கொடுத்ததற்காக வளர்மதி என்ற மாணவி கைது செய்யப்பட்டார். பெரியார் பல்கலைக் கழகத்தில் இருந்தே மாணவி வளர்மதி நீக்கப்பட்டிருக்கிறார். இதேபோல் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவு போட்டதற்காக தமிழ் தேசியப் பேரியக்கத்தின் குபேரனை கைது செய்து சிறையிலடைத்தது போலீஸ்.
இந்த நடவடிக்கைகள் முற்றிலும் சரி என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூறிக்கொள்கின்றனர். குறிப்பாக, ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பதவியிலிருக்க வேண்டுமானால், பாஜக சொல்வதைக் கேட்பதை தவிர வேறு வழியில்லாததால் இப்படி தலையாட்டிப் பொம்மையாய் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இத்தகைய நடவடிக்கைகளால், தமிழக அரசு, மத்திய பாஜக அரசினால் “ரிமோட் கண்ட்ரோல்” செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுகிறது.
Pingback: ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது : மாணவர்களைப் பழிவாங்க அரசு தீவிரம் – thenthidal | தென் திடல்