டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கைவிடாவிட்டால் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியை பார்ப்பதற்காக அய்யாக்கண்ணு நேற்றிரவு திருச்சி வந்தார். இன்று காலை டெல்லி புறப்படுவதற்கு முன்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 11-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது போராட்டத்திற்கு பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகள், அமைப்பினர் ஆதரவு தருகின்றனர். போராட்டத்தை முறியடிக்க பா.ஜ.க.வினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர் செல்போன் மூலம் பேசி தமிழகத்திற்கு வருமாறு எங்களை மிரட்டுகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு போராட்டம் நடத்துங்கள் என்கின்றனர். போராட்டத்தை கைவிடாவிட்டால் டெல்லியில் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர். திருச்சியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் ஒருவரும் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்தவர்களின் செல்போன் எண்களை வைத்து டெல்லி பாராளுமன்ற போலீசில் புகார் செய்துள்ளோம். திருச்சியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் மீது திருச்சி போலீசில் புகார் செய்ய உள்ளோம்.
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். நான் (அய்யாக்கண்ணு) ஆடி கார் முன்பு நிற்பது போன்றும், 5 ஸ்டார் ஓட்டலில் செல்போனில் பேசியவாறு சாப்பிடுவது போன்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாவே பொறுப்பு
இவ்வாறு அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
Pingback: எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் பொறுப்பு: அய்யாக்கண்ணு – thenthidal | தென் தி