குளச்சல் போரில் திருவிதாங்கூர் படைகள் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வெற்றி பெற்றதன் நினைவு தினம் வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இப்போரின் வரலாற்றை கேரளாவை போல், தமிழகத்திலும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவிதாங்கூர் அரசின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் படி, பதினெட்டாம் நூற்றாண்டில், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. அக்காலத்தைய தெற்கு கேரளமும் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளும், சிறு சிறு சமஸ்தானங்களாக சிற்றரசர்களின் ஆட்சியின்கீழ் இருந்தன. வேணாட்டின் அரசரான மார்த்தாண்ட வர்மா அண்மையிலுள்ள சிறு சமஸ்தானங்களுடன் போரிட்டு தனது அரசுடன் இணைத்துக் கொண்டிருந்தார். இதன் முன்னதாக மிளகு வியாபாரத் தலங்களை டச்சுக்காரர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.
மார்த்தாண்ட வர்மாவின் ராச்சிய இணைப்பு நடவடிக்கைகளில் ஒன்றான இளைஇடத்து சொரூப (கொட்டாரக்கரை) இணைப்பு முயற்சியின் போது, கொட்டாரக்கரை ராணியார், டச்சுக்காரர்களின் உதவியை நாடினார். இருப்பினும், மார்த்தாண்ட வர்மாவின் படைகள் இளைஇடத்து சொரூபத்தை போரிட்டு கைப்பற்றினர். இது டச்சுக்காரர்களின் மிளகு வியாபாரத்திற்கு பேரிடியாக அமைந்தது. மேலும் மார்த்தாண்ட வர்மா, ஏனைய ஐரோப்பிய வணிகர்களான கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஃப்ரென்சு கம்பெனிகளுடன் வியாபாரம் செய்வதற்கு முன்னுரிமை கொடுத்தார். இவற்றால், டச்சுக் காரர்களுக்குத் தேவையான வணிகப் பொருட்கள் கிடைக்காமல் போனது.
நிலைமையைச் சரியாக்கும் நோக்கில், கொழும்பிலிருந்து டச்சு கவர்னர் வான் இம்ஹாஃப் (Van Imhoff) பேச்சு வார்த்தைக்காக ராஜா மார்த்தாண்ட வெர்மாவைச் சந்திதார். இருப்பினும் பேச்சுவார்த்தையால் தேவையான பயன்கள் எதுவும் விளையவில்லை.
திருவிதாங்கூர்ப் படைகள் பின்னர் காயங்குளத்தின் அரசினைக் கைப்பற்றுவதற்காக வடக்கு நோக்கி அனுப்பப் பட்டனர். இன்னிலையில், டச்சுக் கடற்படை, தென்பகுதியில் கடியப்பட்டணம், மிடாலம், தேங்காப்பட்டணம் ஆகிய இடங்களைக் கைப்பற்றியது. குளச்சலிலிருந்து கோட்டார் வரை டச்சுப்படைகளின் பிடியில் வந்தது. திருவிதாங்கூர் படைகள் காயங்குளம் சென்ற சமயத்தில், நாட்டுக்குள் புகுந்த டச்சுப் படையைத் தடுக்க யாரும் இல்லாத்தால், அவர்கள் குடிமக்களுக்கு பல்வேறு அட்டூழியங்களையும் செய்தவாறு பத்மனாபபுரம் கோட்டையைப் பிடிக்கச் சென்றனர்.
இதனைக் கேள்விப்பட்ட மார்த்தாண்ட வர்மா, காயங்குளத்திலிருந்த அவரது படையை திரும்பி வரத் தகவல் அனுப்பினார். மேலும் உள்ளூர் நாயர், நாடார் மற்றும் மீனவர்களின் துணையுடன் புதிய படையொன்றை உருவாக்கினார். இப்புதிய படையுடன், காயங்குளத்திலிருந்து திரும்பிய திருவிதாங்கூர்ப் படைகளும் சேர்ந்து, டச்சுப் படைகளுடன் போரிட்டனர். போரில் டச்சுப்படைகள் தோல்வியடைந்தபின் தப்பியோடியவர்கள் குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வக்கப்பட்ட தங்கள் கப்பல்களில் ஏறி கொச்சி நோக்கிச் சென்று விட்டனர். திருவிதாங்கூர்ப் படை 24 டச்சு வீரர்களை சிறைபிடித்ததுடன் குளச்சலில் இருந்த டச்சுப் படைத்தளத்திலிருந்து பீரங்கிகளையும் வாள்கள் மற்றும் சில இதர போர் ஆயுதங்களையும் கைப்பற்றினர். இப்போரில் ராமன் ஐயன் தளவாய், அனந்த பத்மனாபன் தளவாய் போன்றோர், மார்த்தாண்ட வர்மாவுக்கு பேருதவியாக இருந்தனர்.
இப்போரின் பின் டச்சுக்காரர்களின் இந்திய வணிகம் பெருமளவில் கட்டுப்படுத்தப் பட்டது. 1741-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி நிகழ்ந்த போரின் வெற்றியின் நினைவாக குளச்சல் கடற்கரையில் “விக்டரி பில்லர்” என்ற வெற்றித்தூண் நிறுவப்பட்டது.
Pingback: குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை – thenthidal | தென் திடல்