டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி நடந்த சிக்சர் அடிக்கும் போட்டியில் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்சின் முன்னாள் கேப்டனுமான டோனி மூன்று சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7.15 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் இடையே சிக்சர் அடிக்கும் போட்டி ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் அரங்கேறியது.
இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன் உள்பட 8 வீரர்கள் கலந்து கொண்டனர். கிரிக்கெட் உலகின் கதாநாயகர்களில் ஒருவரான டோனி வருகை தந்ததால், அவரை காண ரசிகர்கள் படையெடுத்தனர். பெரும்பாலான ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற கொடியை கையில் பிடித்தபடி வந்து இருந்தனர். அவர்கள் டோனி சிக்சர் அடிக்கையில் பலத்த கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தனர். டோனியின் சீருடையில் ‘தல’ என்ற அவரது செல்லப்பெயர் இடம் பெற்றிருந்தது.
பவுலிங் எந்திரம் மூலம் எல்லா வீரர்களுக்கும் தலா 3 முறை பந்துகள் வீசப்பட்டன. டோனி மட்டும் தான் எதிர்கொண்ட 3 பந்துகளையும் சிக்சருக்கு (ஹாட்ரிக்) தூக்கியடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். அவர் அடித்த 3 பந்துகளும் கேலரிக்கு பறந்து சென்றன.அவருக்கு அடுத்தபடியாக வேட்டி அணிந்து வந்த மேத்யூ ஹைடன், பத்ரிநாத், அனிருதா ஆகியோர் தலா 2 சிக்சர் விளாசினர். மொகித் ஷர்மா, பவான் நெகி, கணபதி ஆகியோர் சிக்சர் எதுவும் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தனர். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி ஒரு சிக்சர் தூக்கினார். டோனி பேட்டிங் மட்டுமின்றி, பவுலிங் எந்திரத்தை இயக்கவும் செய்தார்.