குஜராத் முன்னாள் முதல்வர் ஷங்கர்சிங் வகேலா காங்கிரசில் இருந்து நீக்கப் பட்டார்.
குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக கடந்த 1996 – 1997-ம் ஆண்டில் பதவி வகித்தவர் ஷங்கர்சின்ஹ் வகேலா. பா.ஜ.க.வை சேர்ந்த இவர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எதிர்வரும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ஷங்கர்சின்ஹ் வகேலா-வை முதல் மந்திரி வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும் என இவரது ஆதரவாளர்கள் கட்சிக்குள் போர்க்கொடி உயர்த்தி இருந்தனர். ஆனால், இதுதொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை இறுதிமுடிவு எதுவும் எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வகேலாவுக்கு ஆதரவான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் எட்டு பேர் கட்சி மேலிடத்தின் உத்தரவை மதிக்காமல் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரித்து வாக்களித்திருந்தது கட்சியின் தலைமைக்கு தெரியவந்தது.
இந்நிலையில், வெள்ளியன்று தமது 77-வது பிறந்தநாள் கொண்டாடிய அவர், பிறந்தநாள் உரையில் கட்சிக்கு எதிரான கருத்துக்களை தாம் தெரிவித்துவிடக் கூடும் என்ற எண்ணத்தில், தம்மை காங்கிரஸ் கட்சி 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவிட்டதாகக் கூறியுள்ளார். இருப்பினும், தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் திட்டமில்லை என்றும் வகேலா தெளிவுபடுத்தினார்.
காங்கிரஸின் குறுகிய எண்ணம், பாஜகவின் அதிர்ஷ்டமும், பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவந்துவிட்டதாகக் கூறிய அவர், பாஜகவிற்குத் திரும்பச் செல்லும் எண்ணம் இல்லை என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடியை பாஜக செயல்குழுவுக்கு அனுப்பியது, ஆனந்தி பென் பட்டேலை அரசியலில் அறிமுகப்படுத்தியது, தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கான யோசனையை வழங்கியது என தமது சாதனைகளாக பலவற்றையும் பிறந்தநாள் உரையில் அவர் பட்டியலிட்டார்.