நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கோரி டாக்டர். அன்புமணி ராமதாஸ் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் மனு அளித்தார்.
பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு மசோதா 6 நாட்களில் சட்டமாக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு தொடர்பான மசோதா 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை மந்திரி கூறினார். இது தொடர்பாக பேச பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் நேரம் கோரி இருக்கிறேன்.
நீட் தேர்வு தொடர்பான அவசர சட்டத்துக்கு ஒப்புதல், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் தான் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பதிவு செய்வோம் என்று தமிழக அரசு கூறியிருந்தால் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கட்சிகள் தங்கள் சுயநலத்தை பார்ப்பதால் அருமையான வாய்ப்பை தமிழகம் தவற விட்டு விட்டது.
மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக நான் இருந்தபோது நீட் தேர்வை கொண்டு வர முயற்சித்தார்கள். ஆனால் நான் அனுமதிக்கவில்லை. சென்னை சேப்பாக்கத்தில் நாளை நீட் தேர்வு தொடர்பாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.