தனிநபரின் அந்தரங்கத்திற்கான உரிமை முழுமையானதாக இருக்க முடியாது, கட்டுப்படுத்தப்படலாம் என்று விசாரணையின் போது உச்ச நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு விசாரி த்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா என்பதை நீதிபதிகள் தீர்மானிப்பர்.
இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்களிடம் பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை எழுப்பியுள்ளது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியன், சோலி சொராப்ஜி, ஷியாம் திவான் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
கோபால் சுப்ரமணியம் வாதிடும்போது, குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துடன் அந்தரங்கத்துக்கும் தொடர்பு உள்ளது என்றார். சோலி சொராப்ஜி வாதிடுகையில், அரசியலமைப்பின் எந்தவொரு பகுதியிலும் அந்தரங்கத்துக்கான உரிமை பற்றிக் குறிப்பிடவில்லை என்பதற்காக அப்படி ஒன்றே இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றார்.
ஷியாம் திவான் வாதிடும்போது, 1975-ஆம் ஆண்டு முதல் அந்தரங்கத்துக்கான உரிமையை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. எனது உடல் நாட்டுக்கு சொந்தம் என்பது சர்வாதிகார நாட்டில்தான் பொருத்தமாக இருக்கும் என்றார்.
இதையடுத்து நீதிபதி ரோஹிங்டன் ஃபாலி நாரிமன், “அந்தரங்கத்துக்கான உரிமை பாதுகாப்பு என்பது அடிப்படை சட்டத்தை விட மேலானதா?” என்று கேள்வி எழுப்பினார்.
நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “குடிமக்கள் மீது நியாயமான காரணங்களுக்காக கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களை ஓர் அரசு இயற்றுவதை தடுக்க முடியாது. அந்தரங்கத்துக்கான உரிமை என்பது குறிப்பிட்டு உருவகப்படுத்த முடியாத வார்த்தை. அதை விளக்க முற்பட்டால் நன்மையை விட தீமையே அதிகமாக இருக்கும் என்று கருதுகிறேன்” என்று கூறினார்.
நீதிபதி சந்திரசூட் குறிப்பிடுகையில், “அந்தரங்கத்துக்கான உரிமை அல்லது ரகசியங்கள் என்ன என்பதை எவ்வாறு விளக்க முடியும்? அதன் பொருளாக்கம் மற்றும் வரையறைகள் என்ன? ஓர் அரசால் தனியுரிமையை எவ்வாறு ஒழுங்குமுறைப்படுத்த முடியும்? அந்தரங்கத்துக்கான உரிமையைப் பாதுகாப்பதில் ஓர் அரசின் கடமை என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும்” என்று கூறினார்.
“தொழில்நுட்பத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களைப் பற்றிய விவரங்களை பொதுப்படையாக வெளியிடும் செயல், அந்தரங்கத்துக்கான உரிமையில் சமரசம் செய்து கொள்வதாகாதா?” என்றும் அவர் மனுதாரர்களின் வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் வாதங்களை முன்வைக்க அவகாசம் வேண்டும் என்று, அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கேட்டதையடுத்து, வழக்கின் விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.