மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த எந்த விசாரணையையும் சந்திக்க தான் தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று, பின்னர் டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
அதிமுகவின் ஒரு கோஷ்டியான, ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. அதோடு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அணி தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால், அதனை தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார். தேனாம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதாப் சி.ரெட்டி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு கூறினார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கும்போது யாருடைய தலையீடும் இல்லை என்று கூறிய அவர், சிகிச்சை அளித்ததில் எந்த தவறும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மிகவும் வெளிப்படையாகத் தான் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.