திங்கள்கிழமையன்று கர்நாடக அரசு சிறைத்துறை டி.ஐ.ஜி.யான ரூபா டி மூட்கிலை வேறு துறைக்கு மாற்றியது. அண்மையில் அவர், அ.இ.அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததன் மூலம் பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் தனிச் சலுகைகள் பெற்றார் என்று கூறியிருந்தார்.
ரூபா மூட்கில் தற்போது பெங்களூருவின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் கமிஷனர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரூபா அளித்திருந்த அறிக்கையில், சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டுவது அடிப்படையற்றது என டிஜிபி சத்தியநாராயணராவ் மறுப்பு தெரிவித்திருந்தார்.
டி.ஐ.ஜி. சத்தியநாராயணராவ் மாத இறுதியில் ஓய்வு பெறப்போவதால் தற்போது நிர்வாகப் பொறுப்பு எதுவும் இல்லாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன்முன்பு ஊழல் தடுப்பு ஆணையராக இருந்த என்.எஸ். மேகரிக் தற்போது கூடுதல் சிறைத்துறை இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.