மாரத்தான் போட்டியில் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளின் கல்வி உதவிக்காக தேசிய தடகள அமைப்பும், புனேவில் உள்ள ‘ஷர்ஹாத்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கிலில் நேற்று மாரத்தான் போட்டியை நடத்தின. இதில் 21.1 கி.மீ. தூரத்துக்கான பிரிவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இந்த மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பல்வேறு சமுதாய பிரச்சினைகளுக்காக நடத்தப்பட்டு வரும் மாரத்தான் போட்டிகளில், இளைஞர்களிடம் உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடி வருகிறார். நேற்றைய தினம் பங்கேற்றது, அவருடைய 54-வது மாரத்தான் போட்டி ஆகும். இதனை அறிந்த காஷ்மீர் சட்டமன்ற மேலவை தலைவர் ஹாஜி அனாயத் அலி, மா.சுப்பிரமணியனை வெகுவாக பாராட்டியதோடு, அவருக்கு வாழ்த்தும் கூறினார்.

மா.சுப்பிரமணியன் 2 ஆண்டுகளில் 50 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, தேசிய சாதனை புத்தகமான ‘இந்தியன் புக் ஆப் ரொக்கார்ட்ஸ்’, ஆசிய சாதனை புத்தகமான ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளார். மேலும் உலக சாதனை பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top